Friday, January 29, 2010

நேசம்


யோவ் நான் சொல்லுறத கவனமா கேட்டுக்க, எங்க இயக்குனர் ரொம்ப கோபக்காரர், அவர் எதிர்பார்க்கிற நடிப்பு உன்கிட்ட இருந்து வர வரைக்கும் உடமாட்டாரு, சட்டுன்னு
கோவம் வரும், எக்கு தப்பா திட்டுவாரு, அதெல்லாம் நீ மனசுல வச்சுக்க படாது, பேட்டா காசு எல்லாம் கரெக்டா வாங்கி கொடுத்திருவேன், என்ன யமன் வேஷம் போடுறியா?

சரி சார், என்ன வேஷம் கொடுத்தாலும் செய்றேன் சார், நீங்க எனக்கு வாழ்க்கை கொடுத்த
தெய்வம் சார், இதுவரை ஹீரோவா ஆகணும்னு வறட்டு பிடிவாததுல இருந்து, வறுமையினால என் அம்மாவை
தொலைச்சதுதான் மிச்சம், மீதம் இருக்குற நாளையாவது என் அப்பா, தங்கைக்கு உபயோகமா
இருக்கனும்ன்னு நினைக்கிறேன் என்றான் சாரதி.

சரி...சரி... போய் "யமன்" கெட் அப் போட்டு ரெடியா இரு.

ஹீரோ இலட்சியத்தை கொன்று விட்டு, "யமனாகி" இயக்குனர் வருகைக்கு காத்திருந்தான் சாரதி.

அந்த கோபக்கார இயக்குனர் வந்த உடனே மொத்த யூனிட்டும் பொதுத்தேர்வு எழுதும் கூடமாகியது. கதாநாயகன், நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து கொண்டிருந்தார்கள்.

உச்சி வெயில் மண்டையை பிளந்தது, காலையில் அவசரமாக
புறப்பட்டதால் சாப்பிடவில்லை, பசி, தாகம், எல்லாம் சேர்ந்து
சாரதியை வாட்டியது.

உணவு இடைவேளை வந்து அனைவரும் சாப்பிட்டனர், சாரதி புதுவரவு துணை நடிகன் ஆனதால் அவனுக்கான சாப்பாடு மறதியால் விடுபட்டது.
யாரோ ஒரு நல்ல உள்ளம் கவனித்து, சாரதிக்கான சாப்பாடு
வந்து சேர்ந்த பொழுது, இயக்குனரின் கர்ஜனை குரல் கேட்டது...

யாருய்யா "யமன்"....

சாப்பட்டை அப்படியே வைத்துவிட்டு, அவர் முன் ஓடிசென்று
நான்தான் சார், சாரதி பவ்யமாக நின்றான்.

இதுக்கு முன்னால நடிச்ச அனுபவம் இருக்காயா?

காலேஜ் நாடகத்துல நடிச்ச அனுபவம் இருக்கு சார்...

சீன நான் ஒரு தடவை சொல்றேன், கவனமா கேட்டுக்க, அதோ நிக்குது பாரு எருமை அது மேல நீ
நல்லா நெஞ்ச நிமித்தி உக்காந்துகிட்டு, உன் முன்னால நிக்குற ஆள பார்த்து, ஏய் மானிடா பூமாதேவிக்கு பாரமாக இருந்தது போதும்,
கிளம்பு என்னோடு" அப்படின்னு
கம்பீரமா சொல்லணும் புரிஞ்சதா?

சரி சார்.

ரெடி, ஸ்டார்ட் காமிரா, ஆக்சன்...

கட்... யோவ்...யோவ்.... நல்லா கம்பீரமா உக்காருயா, சொங்கி மாதிரி உக்காந்துகிட்டு...
(சாரதிக்கு லேசாக பசி + பயத்தில் வியர்த்து நடுங்கியது)

ரெடி, ஸ்டார்ட் காமிரா, ஆக்சன்...

கட்...டேய்.. நல்லா வீரமா பேசுடா, வாயில என்ன கொழுக்கட்டையா வச்சு இருக்க....
(சாரதிக்கு அவமானமாக இருந்தது)

ரெடி, ஸ்டார்ட் காமிரா, ஆக்சன்...

கட்...எருமை...எருமை.... யோவ் அசிஸ்டென்ட் இவன எங்கயா பிடிச்ச, ஒரு டயலாக் உருப்படியா சொல்ல தெரியுதா, தடிமாடு...அஞ்சறிவு உள்ள அந்த மாடு
கூட அழகா சொன்னபடி செய்யுது, உனக்கு புத்தி இல்ல...
(சாரதியின் விழித்து கொண்ட தன்மானத்தை வறுமை "தூங்க சொல்லியது")

சாரதி இயக்குனரிடம் கெஞ்சினான், இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க சார், சரியா பண்ணிடுறேன்...

இன்னோர் தடவ சரியா பண்ணல தொலச்சிருவேன் ராஸ்கல்...

ரெடி, ஸ்டார்ட்...

சார் தயவு செய்து படபிடிப்ப நிப்பாட்டுங்க, வேடிக்கை பார்த்த கூட்டத்தை பிளந்து கொண்டு ஒரு கூட்டம் வந்தது இயக்குனரிடம்.

நீங்கல்லாம் யாரு, இந்த இடத்துல படபிடிப்பு நடத்த நாங்க முறையா அனுமதி வாங்கி இருக்கோம் தெரியுமா?

சார் நாங்க ப்ளு கிராஸ்ல இருந்து வரோம், இந்த மாதிரி வாய் இல்லா ஜீவன்கள
வதைக்குரத நாங்க அனுமதிக்க மாட்டோம்....

***********************************************************************************

அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Tuesday, January 26, 2010

வானவில் உணர்வுகள்


உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் ஏறவில்லை
உன்னால்தானடா மெய் மறந்தேன் என்றாய்
பறந்தேன்

ஹைட்ரஜனும் நைட்ரஜனும் புரியவில்லை
என் ஆக்சிஜன் நீ என்றாய்
குளிர்ந்தேன்

ஒரு செல் உயிரியாம் அமீபா
நாமோ ஈருடலில் ஓருயிர் என்றாய்
நெகிழ்ந்தேன்

மல்லி படர வேண்டுமாம் பந்தல்
நீ படர நான் பந்தல் என்றாய்
பரவசமானேன்

பூமிக்கு துணையாய் நிலா
உன் வாழ்க்கை துணையாய் நான் என்றாய்
வலுவானேன்

ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்றாய்
கனவு பெருங்கடலில்
முழ்கினேன்

மணப்பந்தல் என்றதும் என் குடியில் பிறந்த
இவரே என்னவர் என்றாய்
நடை பிணமானேன்.


*************************************************************
அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவன் - என் பார்வையில்

ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது இந்த ஆயிரத்தில் ஒருவன், நேற்று மீண்டும் ஒருமுறை பார்த்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறமா தமிழ் படத்துல சுத்தமான தமிழ் கேட்டது செவிக்கு விருந்து.

கப்பலில் நாயகர் உள்பட அனைவரும் ஏற்றப்படும் காட்சியில் இருந்து ஆரம்பிக்கும் விறுவிறுப்பு, கடைசி வரை குறையவில்லை. இதில் முக்கியமான ஒரு நபரை பாராட்டியே ஆக வேண்டும், அவர்தான்
ஆர்ட் டிரெக்டர். அனைவரும் தீவுக்கு சென்ற பின் வரும் அந்த மாளிகை செட்டாகட்டும், கடைசி சண்டை காட்சியில் வரும் கப்பல்கள் எல்லாம் மிக தத்ரூபம்.

கதைன்னு பார்த்தா சர்வதிகாரம் நடக்குற எடத்துல இருக்கிற ஹீரோ அத எதிர்த்து மக்களாட்சி கொண்டுவர போராடுறதுதான் கதைக்களம். ஆனால் இதை, காதல், நகைசுவை எல்லாம் கலந்து மிக சுவாரசியமாய் படைத்து
உள்ளார்கள்.

கதையோட்டத்துடன் வரும் அந்த நகைச்சுவை அரசரின் நகைச்சுவை,
மற்றும் கடற்கொள்ளையனாக அறிமுகமாகி, பின் ஹீரோவினால் மனம் திருந்தி நல்லவராகும் பாத்திரத்தில்
நடித்தவரின் நடிப்பும் பாராட்டப்பட வேண்டியது.

ஹீரோயின் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம் உணர்ந்து நடித்து
உள்ளார்.

இந்த படத்திற்கு இசை "இரட்டையர்கள்" பாடல்கள் அனைத்தும் தேனில் தோய்த்த பலா, அத்தனை இனிமை.

கடைசியில் மக்களாட்சி மலர்ந்ததா இல்லையா என்பதை வெள்ளித்திரையில் அல்லது "இந்திய தொலைக்காட்சிகளில்
முதல் முறையாகவோ" அவரவர் வசதிக்கு ஏற்ப பார்த்து
கொள்ளவும்.


ஆயிரத்தில் ஒருவன் - என்றென்றும்டிஸ்கி:நான் குறிப்பிட்டுள்ள இந்த படம் நிஜமாகவே எனக்கு
பிடித்த படம். நீங்கள் எதிர்பார்த்து வந்த படத்த நான் இன்னும்
பார்க்கல, ஹி..ஹி..ஹி..
ரெடி, ஸ்டாட், மியுசிக்....

**************************************************************************************அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Wednesday, January 20, 2010

வரதட்சணை


இது வரை சினமாவில் மட்டுமே பெண் பார்க்கும் படலம் பார்த்த நான் முதன் முறையாக எனக்கான, பெண் பார்க்க வந்து இருந்தேன், அப்பா, அம்மா, அண்ணன்கள்.அக்கா, தங்கை, மாமன், அத்தை மற்றும் நண்பர்கள் படை சூழ.

வரதட்சனை வாங்க கூடாது என்ற கொள்கை வைத்து இருந்தேன்.
என் அண்டை வீட்டில், அவர்களின் மருமகள் வீட்டார் கொடுத்த
"வாக்கை" காப்பாற்ற வில்லை என அந்த பெண்ணை, அவள்
பிறந்த வீட்டிற்கே அனுப்பி விட்டனர். இந்த கொடுமைகள் எல்லாம்
பார்த்ததன் பாதிப்பினால் நாம் வரதட்சனை வாங்க கூடாது
என்பதில் உறுதியாக இருந்தேன்.

என் அம்மா, அக்காவிற்கு இதில் ஆரம்பத்தில் உடன்பாடு இல்லை
என்றாலும், அப்பா என் பக்கம் இருந்ததால் வேறு வழி இன்று
ஒத்து கொண்டனர்.

இந்த பெண்ணையும் பேப்பரில் "வரதட்சணை கொடுக்க மாட்டேன்" பகுதியில் பார்த்துதான் தேர்ந்து எடுத்தோம். இதோ இப்ப பெண் பார்க்கும் படலம்.

வந்தாள் என்(!!) தேவதை, வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்த பின்பு நாங்கள் தனியாக பேசும் வாய்ப்பு வந்தது.(ஏற்படுத்தி கொண்டேன்)

அவளிடம் உங்களுக்கு என்னை பிடிச்சு இருக்கா என்றேன், அவள் எனது கண் பார்த்து, என் அப்பா, அம்மா சரி என்றால் எனக்கும் சரிதான் என்றாள்.
அப்புறம் என்ன பேசுவது எனதெரியாமல், கொஞ்ச நேரம் "பொதுவான"
விசயங்கள் பேசி விட்டு வந்தேன்.

ஒரு வழியாக கடையில் வாங்கப்பட்ட பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் சாப்பிட்ட பின்பு வீடு வந்து
சேர்ந்தோம்.

அம்மா போடும் காபி வாசனை பிடித்து சமையலறை சென்று
அம்மாவிடம் (வெட்கம் விட்டு!!) கேட்டேன், கல்யாண தேதி எப்பம்மா குறிச்சு இருக்கே.

ரொம்ப ஆசயை வளத்துக்காதடா, என அம்மா சொன்னதும் எனக்கு சகலமும் அடங்கிவிட்டது. ஏம்மா நிறைய வரதட்சணை கேட்டு டார்ச்சர் பண்ணினயா, உனக்கு நிறைய பேராசைம்மா என்று கோபமாக கத்தினேன் அம்மாவிடம்.

பேசி முடிச்சாச்சா, பேராசைப் பட்டதும், வரதட்சணை கேட்டதும்
நானில்லடா, அவங்கதான் என்று புதிர் போட்டாள் அம்மா.

என்னம்மா சொல்லுற, புரியும்படி சொல்லும்மா.

அவங்க பொண்ணை கட்டிக்க போற மாப்பிளைக்கு சொந்தமா வீடு,
கார் எல்லாம் இருக்கனுமாம், மாச சம்பளம் "குறைஞ்ச பட்சம்" 60,000௦௦௦-ம் ஆவது இருக்கனுமாம் ,முக்கியமா கல்யாணம் முடிஞ்ச உடனே தனி குடித்தனம் போகணுமாம், அவங்க பொண்ணுக்கு வீட்டில் கூட்டமாக ஆட்கள் இருந்தால்
அலர்ஜியாம், பிடிக்காதாம், என அம்மா அவர்கள் சொன்னதை அடுக்கிகொண்டே போக எனக்கு
மயக்கமா வருது...

*************************************
அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Sunday, January 17, 2010

பெர்முடா முக்கோண மர்மங்கள்

வட அட்லாண்டிக் கடலின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பகுதியே,
பெர்முடா முக்கோணம், என அழைக்கப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர்
சைத்தானின் முக்கோணம்.

இதன் எல்லைகள் என பார்த்தல், பஹாமாஸ், புளோரிடா நீரிணைப்பு,மொத்த கரீபியன் தீவுகள் மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை அடங்கும்.
பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது காணமல் போன விமானங்களும், கப்பல்களும் பழுது
அடையாமல் நல்ல நிலைமையில் இருக்கும்பொழுதே
மாயமாகி விட்டதாக கூறுகிறார்கள்.

இந்த மாதிரி, எந்த பொருள் அந்த பகுதியில் சென்றாலும் மறைவதற்கு விடை
கிடைக்க வில்லை. நம்மை மீறிய ஏதோ ஒரு சக்தி அங்கு
இருப்பதாக, பொதுவான கருத்து ஒன்று உள்ளது.

"காணாமல் போகும்" விபத்துகளில் அதிகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா ஜலசந்தியைச் ஒட்டிய தெற்கு எல்லைப்பகுதியில் தான்.

காணாமல் போன சில சம்பவங்களை பார்ப்போம்:
சம்பவம் 1:
பிளைட் 19 என்பது டிபிஎம் அவெஞ்சர் குண்டு வீசும் விமானங்களுக்கு பயிற்சியளிக்கும் விமானமாகும், இது டிசம்பர் 5, 1945 அன்று அட்லாண்டிக் கடல் மீது பறக்கும்பொழுது மறைந்து போனது.
அந்த விமானம் அசாதாரணமான நிகழ்வை சந்தித்தது என்றும் இயற்கைக்கு மீறிய திசைகாட்டி அளவுகளைக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் விமானம் செலுத்தப்பட்ட நேரத்தில் வானிலை நன்றாகவே
இருந்ததாம், அதன் விமானியும் நன்கு அனுபவம் வாய்ந்தவராம்.
அவர் பெயர் சார்லஸ் கரோல் டெய்லர் ஆகும்.

காணமல் போன இந்த விமானத்தை தேடுவதற்காக 13 பேர் கொண்ட குழு ஒன்று, கப்பல்படை விமானம் மூலம் அனுப்பப்பட்டது, ஆனால், அதிர்ச்சியூட்டும் விதமாக அந்த விமானத்தில் இருந்தே ஒரு தகவலும் இல்லை.

அதே நேரத்தில், புளோரிடா கடற்கரையோரம், ஒரு கப்பலில் இருந்தவர்கள், கப்பல் படை விமானம் காணமல் போன விமானத்தை தேடி ரோந்து பணியில் இருந்த அதே நேரத்தில் ஒரு வெடிப்பு சம்பவத்தை அவர்கள் பார்த்ததாக கூறினர்.

இந்த சம்பவத்தை பற்றி அமெரிக்கன் லேசன் இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டது, பிளைட் 19 விமான ஓட்டி கூறியதாக அந்த இதழ் தெரிவித்த செய்தி: நாங்கள் இப்போது வெள்ளையான நீர் பரப்பிற்குள் நுழைந்து உள்ளோம், எதுவும் சரியாக தெரிய வில்லை. நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியவில்லை, இந்த இடத்தில் தண்ணீர் பச்சை கலரில் உள்ளது. மேலும் கப்பல்படை விசாரணை குழு அதிகாரிகள் விமானங்கள் "செவ்வாய்க்கு பறந்து போனதாய்" கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
(கதை கட்டியது, இந்த சம்பவத்தை சுவாரசியமாக்க)

ஆனால் உண்மையில் இந்த சம்பவம் நடந்து முடிந்த சமயத்தில் பருவநிலை கொந்தளிப்பானதாக மாறியிருந்தது. அதே நேரத்தில் தலைமை விமானி டெய்லருக்கும், பிளைட் 19 இன் மற்ற விமானிகளுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்கள் பற்றிய கடற்படை அறிக்கைகள், எழுதப்பட்ட பதிவுகள் அந்த விமானத்தில் எந்தவிதமான காந்த பிரச்சினைகள் இருந்ததாய் அறிவிக்கவில்லை.

மர்மங்கள் தொடரும்...

செய்தி மூலம், படம்:விக்கிபீடியா - நன்றி

அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Thursday, January 14, 2010

பொங்கல் தரும் செய்திபஞ்சபூதங்கள் ஆகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை வழிபாடும் நாளே பொங்கல் திருநாள் ஆகும். எப்படி என்று கேட்குறீர்களா? நமது மரபுப்படி மண்பானையில் தண்ணீர் விட்டு அரிசியினை கொதிக்க வைக்க பனை ஓலை மூலம்
நெருப்பு வைக்கிறோம் வீட்டுக்கு வெளியில். நெருப்பு எறிவதற்கு காற்றும் ஒரு காரணம்.

பொங்கல் பொங்கியவுடன் சூரியனை பார்த்து நன்றி சொல்லுகிறோம். இந்த செயலில்
பஞ்ச பூதங்களும் இருப்பதை கவனித்தீர்களா.

பொங்கல் என்றதும் சிறியோர் முதல் பெரியோர் வரை நினைவுக்கு வருவது கரும்பு.
இந்த கரும்பானது நுனியில் உப்பு கரிக்கும், அடிக்கரும்பு ரொம்ப இனிப்பாகவும் இருக்கும்,
இதில் நம் வாழ்வியல் உள்ளது. ஆரம்ப காலங்களில் நாம் எதிர்கொள்ளும் சிரமங்கள் நுனிகரும்பு போன்றது, பின் பெரும் வெற்றிகள் அடிக்கரும்பு போல தித்திப்பாக இருக்கும். எனவே, தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள்.


பொங்கல, நாம தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்ன்னு மூணு நாள் கொண்டாடுறோம், அந்த காலத்துல 28 நாட்கள் கொண்டாடி
இருக்காங்க. (ம்... கொடுத்து வச்சவங்க.. இப்ப பொங்கல் நாள, காலண்டர் பாத்துதான்
தெரின்சிக்கவேண்டி இருக்கு)

அனைவருக்கும் இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Tuesday, January 12, 2010

என்னை தூக்கி எறிய வேண்டாம்


யாரவது நம்மை அவமதித்து விட்டால் அவன் என்னை கறிவேப்பிலையை தூக்கி எரியுற
மாதிரி என்ன எறிஞ்சிட்டான் என புலம்புவோம். விடுங்கள் கவலையை கறிவேப்பிலையின்
மகத்துவம் தெரியாமல் அதனை நாம் எறிவது போல், நம்மை உதாசீன படுத்தினால்
நஷ்டம் அவர்களுக்குதான்.

இதுல அப்படி என்னதான் இருக்குன்னு கேட்குறீங்களா, இத படிச்ச அப்புறமா என்ன இல்லைன்னு நம்ம கேள்வியை மாத்திக்கிற அளவுக்கு இதுல மருத்துவ குணங்கள் இருக்கு.

பலருக்கு கண்ணாடி முன்னால நிக்கும்போது நம்ம தலை முடி இன்னும் வளந்தா
நல்லா இருக்குமேன்னு தோணும், இத (கறிவேப்பிலை) சாப்பிடுங்க முடி
வளரும் அதோட இலவச இணைப்பா கண் பார்வையும் பிரகாசமாகும்.
சிலருக்கு முகத்தில அம்மை நோய் வந்ததோட வடு இருக்கும். அத நிரந்தரமா போக்கணுமா,
கறிவேப்பிலை ஒரு பிடி, கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு, கசகசா ஒரு கரண்டி இதை
எல்லாம் சேர்த்து அரைத்து முகத்தில் தடவுங்கள். அரை மணி நேரத்துக்கு மனசுக்கு
பிடிச்ச பாட்டை கேளுங்க அப்புறமா மறக்காம முகத்தை கழுவுங்க. இதே
மாதிரி குறைந்த பட்சம் பதினைந்து (15) நாளைக்கு செய்யுங்க, அப்புறம் பாருங்க முகத்துல இருக்குற
தழும்புகள் போயே போச்சே, போயிந்தே, இட்ஸ் கான்ன்னு உங்களுக்கு பிடிச்ச பாசையில நீங்களே சொல்லுற லெவெல்ல உங்க முகம் இருக்கும்.

சில அம்மாக்கள் என் புள்ள சாப்பிடவே மாட்டேன்குது, அப்படியே சாப்பிட்டாலும்
ஜீரணம் ஆக மாட்டேன்குதுன்னு புலம்புவாங்க,
கவலையை விடுங்க. கறிவேப்பிலையுடன், சுக்கு, மிளகு, சீரகம் எல்லாம் சேர்த்து
வறுத்து, இதோட உப்பை சேர்த்து சாதத்துடன் பிசைந்து கொடுங்க, அப்புறம் பிள்ளைங்க
அம்மா ஒன் மோர் தோசைம்மான்னு சொல்லும், இது சிறுவர்களுக்கு மட்டும்ன்னு நினைக்காதீங்க, பெரியவர்களுக்கும் பொருந்தும்.


இது மட்டுமில்லாம, இதுக்கு சில தொற்று நோய்கள், சோகை நோய் போன்றவற்றை
தடுக்கும் ஆற்றல் உண்டு, வாயப்புன்ன குணமாக்கும், பல் ஈறுகளையும் எலும்புகளையும் வலுபடுத்தும், மலசிக்கலை போக்கும்.
இதோட இதுல ஏ, சி, இருக்கு, (அதாங்க விட்டமின்ஸ்.)

இனிமே கறிவேப்பிலையை தூக்கி எறியாதீங்க, அப்படி செய்றவங்கள பார்த்தா இதோட
மகத்துவத்த எடுத்து சொல்லுங்க.


பி.கு.துவையலா செஞ்சும் சாப்பிடலாம்.
எங்க அம்மா கறிவேப்பிலை துவையல் செய்வாங்க, ருசியாக
இருக்கும்.


டிஸ்கி:நான் படித்தவற்றை பெருக இவ்வையகம் என உங்கள்
பார்வைக்கு கொடுத்துள்ளேன்.அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Sunday, January 10, 2010

முதல் கொலை

நாளைக்கு நீ அவனை போட்டுறனும் மச்சான், சரியா காலைல பத்து மணிக்கு
அய்யனார் கோவில் கிட்ட வச்சு முடிக்கிற. அவன் வந்த உடன நான் அவன் பின்னால
சத்தம் இல்லாம போய் அவன வாக்கா பிடிசிக்கிறேன், நீ அவன போடுற.

ஒன்னும் பிரச்சினை ஆய்டாதே, அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடா, அவன் இருந்த சுவடு தெரியாம
பண்ணிரலாம். கைய நீட்டி காசு வாங்கியாச்சு, வாங்குன
கூலிக்கு துரோகம் பண்ணக்கூடாதுல.

இரவெல்லாம் நாளை நடக்க போவதை நினைத்து தூக்கம் வரல, என்னதான் மாமன்
காரன் சமாதானம் சொன்னாலும் எனக்கு பயமாக இருந்தது. எனக்கு இதுல முன் அனுபவம் கிடையாது. மாமன் கொடுத்த குருட்டு தைரியத்துல சரின்னு ஒதுக்கிட்டேன்.

பேசாம ராவோட ராவா எங்கையாவது ஓடிரலாமா, மனசு
கல்லு வீட்டு கடிகார பெண்டுலம் கணக்கா ஆடுச்சு, ரவை பத்து மணிவாக்கில டாஸ்மாக் போய் ஒரு கட்டிங்க போட்டதுக்கு அப்புறமா நங்கூரம் போட்ட கப்ப (கப்பல்) கணக்கா நச்சுன்னு நின்னுச்சு. வூட்டுக்கு போற வழியில அவன பார்த்தேன்.அவன் வக்கனையா
வூட்டு பொறவாசல்ல சாப்பிட்டுகிட்டு இருந்தான்.

நல்லா சாப்பிடு மவனே, இதுதான் உனக்கு கடைசி சாப்பாடு, நாளைக்கு நீ குலோசு. நாளைக்கு எங்க மாஸ்டர் பிளான்ல நீ அவுட்டுதாண்டி.

சேவல் கூவுற சத்தம் கேட்டுச்சு, பொழுது விடிஞ்சிருச்சா,
எழுந்திரு மச்சான், சீக்கிரம் குளிச்சிட்டு, அந்த திருபாச்சி அருவாவ எடுத்து வை, மாமன் ஆர்டர்
போட்டுட்டு குளிக்க போச்சு. நானும் குளிச்ச அப்புறமா கிளம்பினோம். மாமன் அருவாவ விருமாண்டி கணக்கா முதுகுக்கு பின்னால சொருகி வச்சுகிச்சி.

மணி காலை 9.50 - ஆச்சு, எனக்கு கை கால் எல்லாம் உதறல் எடுக்க ஆரம்பிச்சிருச்சி,
மாமன் கிட்ட, நீயே போட்ரு மாமா எனக்கு பயமா இருக்குன்னு சொன்னேன்.

அட கோட்டிக்காரா, பயப்படாத, மொதல்ல அப்படித்தான் இருக்கும், போக போக சரி
ஆயிரும்ன்னு சொல்லுச்சு.

9.55- அவன் வந்துட்டான், மாமன் சொல்லுச்சு, நான் அவன நவுறமா இறுக்கமா
பிடிச்சுக்கிறேன், நீ முடிச்சிருன்னு திரும்ப சொல்லுச்சு.
9.56
அவன் நாங்க "ஸ்பாட்" பண்ணுன இடத்து கிட்ட வந்தான்.

9.57
மாமன் நைசா அவனுக்கு தெரியாம அவன் பின்னாடி போச்சு...

9.58
மாமான் அவன நவுர விடாம பிடிச்சுகிச்சு...

9.59
மாப்ள போடுல...

10.00
நான் போட்டதுல அவன் தலை தனியாகவும், உடம்பு தனியாகவும் போயிருச்சு, அந்த இடமே ரத்த களரி ஆச்சு...
சபாஸ்ல மாப்பிள இப்படிதான், நேந்து விட்ட கெடாவ வெட்டனும். நீதாம்ல என் தொழில் வாரிசின்னு
அய்யனார் கோவில்ல பூசாரியா இருக்க என் மாமன் சந்தோசமா சொல்லுச்சு.
அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Friday, January 8, 2010

அதாண்ணே இது

தானைத்தலைவர் டவுசர் நாயகன் நடித்த படத்தில்
அண்ணன் செந்தில் ஒரு வாழைபழத்தை ஏமாற்றி சாப்பிட்ட பின்னர் சொல்ற டயலாக் இது.

வாழைப்பழம் சாப்பிடுவதால்
நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்குது.சுளுவா கிடைக்கிற இந்த வாயபயத்தில, ச்சே.. வாழைபழத்தில எவ்வளவு மருத்துவ குணம் இருக்கு தெரியுமா?

சிலர் கழிவறைக்குள் போனாலே, தீ படித்து ஓய்ந்த ஒரு எபெக்ட் இருக்கும்.
(அவ்வளவும் சிகரெட் புகை) சிகரெட் பிடித்தால்தான் அவர்களுக்கு "வருமாம்"

இந்த மாதிரி "வரும் ஆனா வராது" பிரச்சினை உள்ளவர்கள் வாழைபழம் சாப்பிட்டால் இனிதே காலைக்கடனை கழி(களி)க்கலாம். இதில் அதிகமான பைபர் இருப்பதால் குடலை சுத்தமாக்கி "ஸ்மூத்தா" வெளியாவதற்கு உதவுகிறது.

அத்தி பூத்தாப்புல சில நாள் நல்ல சாப்பாடு கிடைச்சுட்டா, பிரிச்சு மேஞ்சுருவோம், அப்புறம் ஒரே "மந்தகாசமா" இருக்கும். இந்த மாதிரி
நேரத்துல ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு பாருங்க, சுறுசுறுப்பு தானா வரும். எப்படின்னு கேட்டா, இதுல நம்ம
மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களும் இருக்கு.

இந்த மேட்டர் நம்ம முன்னோர்களுக்கு தெரியும்போல, அதனாலதான் கல்யாண வீடுகள்ல தாம்பூலப்பை (அப்படின்னு ஒன்னு கொடுப்பாங்க) உள்ள வெத்திலை, பாக்கு இதோட
வாழைப்பழம்மும் இருக்கும்.

நம்ம பீட்டருங்க இத்த பத்தி (இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்) ஆராய்ஞ்சி சொன்னது, ‌தினமும் ‌மூணு வேளை சாப்பாட்டுக்கு அப்பால ஒத்த வாழை‌ப்பழ‌ம் சாப்டாக்க, மூளை சுறுசுறு‌ப்பாக இ‌ய‌ங்கு‌ம்.

அது மட்டும் இல்லீங்கோ, இது
மனத்தளர்ச்சியையும் நீக்க கூடிய ஆற்றல் கொண்டது.

இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டா ஒன்னரை மணி நேரத்தில நம்ம உடலுக்குத் தேவையான, உறுதியான, கணிசமான, ஊட்டச்சத்தை பெற முடியும்ன்னு ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இதுல மூணு வகையான இனிப்பு பொருட்கள் இருக்கு. சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ், மேலும் நம்ம குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அ‌திகமாக‌க் கொண்டுள்ளது.

இதோட உடல் பரும‌ன், மற்றும் நம்ம உடம்போட வெப்பநிலையை ‌நல்லா வச்சுக்கவும், குட‌ற்பு‌ண்,போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு வாழை‌ப்பழ‌ம் ந‌ல்ல மரு‌ந்தாக உ‌ள்ளது.


டிஸ்கி:இதெல்லாம் உடல்நிலை ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே.
சிலருக்கு உடலில் சர்க்கரை அளவு சரியாக இருக்காது, மற்றும்
சளி, காய்ச்சல் இருந்தால் தவிர்க்கவும்.


அப்பாவி அங்கு:கவுண்டமணி அங்கிள் அந்த இன்னொரு
வாழைப்பழம் என்ன ஆச்சுன்னு கண்டு
பிடிச்சிடீங்களா?அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க.
(தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Wednesday, January 6, 2010

பூக்க வேண்டும்அழகிய பூந்தோட்டமாய் இந்த
பூமிபந்து
இதன் வண்ணமலர்களாய்
தாவரங்கள், விலங்குகள், மானிடர்கள்
முன்னவை இரண்டும் தன் இயல்பில் இருக்க
சில மானிடர்
விலங்காய் மாறியதால்
பூந்தோட்டம் போர்க்களமாகியது
போர்க்களம் மீண்டும் பூந்தோட்டமாய்
மாற பூக்க வேண்டும்
மனித நேயம்.


அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

Sunday, January 3, 2010

உள்ளங்கையில் உலகம்

வாசு,எப்ப பார்த்தாலும் அந்த கம்ப்யுட்டர்-ஐ கட்டி அழுதுகிட்டு இருக்காம கொஞ்சம் வீட்டுக்குள்ள
இருக்கிற எங்களையும் கவனி, என கத்துறது என்னோட அம்மா.

போம்மா, இப்ப உலகமே நம்ம வீடு மாதிரி, உள்ளங்கையில இருக்கு, உலகம் சுருங்கிருச்சும்மா,
என நான் குடி இருந்த கோவிலை அடக்கி விட்டு, வலையில் மீராவுடன் அரட்டையை தொடர்ந்தேன்.

மீரா, கடந்த ஆறு மாதமாக நெட் சாட்டிங் வாயிலாக எனக்கு அறிமுகமானாள், முதலில் சாதாரணமாக தொடங்கிய அரட்டை, இப்பொழுது அவளுடன் ஒரு நாள் சாட்டாவிட்டால் கூட "சேது" மாதிரி
விட்டத்தை பார்க்கும் நிலை, அவளுக்கும் "அதே."

இது வரை அவள் முகத்தை, ஏன் போட்டோ கூட என் கண்ணில் காட்டவில்லை. ஆனால் நான் என்னோட திருமுகம் மட்டுமில்லாது, இலவச இணைப்பா என்னோட நாற்புறமும் தெரியிற மாதிரி விதவிதமான போசுல
போட்டோ எடுத்து
அவளுக்கு அனுப்பினேன். ஆனா அந்த கள்ளி, அதுக்கப்புறம் கூட அவளோட சுண்டு விரலைக்கூட படம் எடுத்து அனுப்பல.

நாளை நல்ல முகூர்த்த நாள் போல,
ஒரு காபி ஷோபில் எங்க நட்புப்பாலத்தின்
திறப்பு விழா.

விடிந்தும் விடியாத காலை நேரத்தில் எழுந்து, மூணு நாள் முள்ளு
காட்டை துவம்சம் செய்து விட்டு மணி எப்ப ஒன்பது ஆகும்ன்னு 90 முறை செல் போனின்
திரை பார்த்து, ஆனதும்...

ஹலோ... ஹலோ... நான் இப்ப அண்ணா சாலையில இருக்கேன், இங்க... இங்க... பாருங்க "கருப்பு கலர் பல்சர் தெரியுதா" அது நாந்தேன். விடாம என்ன பாலோவ் பண்ணுங்க.

மீரா எப்படி இருப்பா, கருப்பா, சிகப்பா,
நெட்டையா, குட்டையா என்னுள் ஆயிரம் கேள்விகள் மண்டையை
குடைந்தது. ஒரு வேளை பல் எல்லாம் நீட்டிக்கொண்டு "கல்யாண ராமன் கமல்" மாதிரி இருப்பாளோ.
இல்லை, பத்திரிகைகளில் வர மாதிரி "அவளா இவன்" ஆக
இருப்பானோ, ச்சே இது என்ன நினைப்பு,
அவ எப்படி இருந்தா எனக்கு என்ன,
இதுவரை சாட்டியதன் மூலம் அவள் மனசு கள்ளம் கபடமற்றது (!!)
என்பது மட்டும் தெரிகிறது...

நான் யோசித்து கொண்டே வந்ததில் என் முன்னே சென்ற கார் திரும்புவதை கவனிக்க வில்லை...

"சங்கி மங்கி" மாதிரி நான் விழுந்து கிடந்தது வரைதான் நினைவு இருந்தது.

சொர்க்கமா, நரகமா, இதுதான் நான் மெல்ல கண் விழித்தவுடன் என் உள் ஓடிய முதல் கேள்வி.

வாசு, உனக்கு ஒன்னும் இல்ல, அதிர்ச்சிஇனால உண்டான சின்ன மயக்கம்தான்,
அப்படின்னு சொல்ற பெரியவர் யார்னு எனக்கு தெரியல.

ரொம்ப நன்றி சார், உங்களுக்கு எப்படி என் பெயர் தெரியும், நீங்க எனக்கு தூரத்து சொந்தமா?

அந்த பெரியவர் சிரித்துகொண்டே, இந்த உலத்துல எல்லோருமே சொந்த பந்தங்கள்தான். ஆனா நாம ரொம்ப தூரம் எல்லாம் இல்ல உங்க வீட்டுக்கும், என் வீட்டுக்கும் இடையில ஒரு கான்க்ரீட் சுவர்தான் இருக்கு என்றார்.(அம்மாகிட்ட சாரி சொல்லணும், பின்ன உலகம் சுருங்கிருச்சும்மான்னு இரண்டாவது பாராவில நான்
சொன்னது தப்புதான)

அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
நன்றிகள் பல.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)