பயணிக்கும் முன்பு: இது ஒரு மீள் பதிவு, மார்ச்14, 2010 ல் இதே கடையில் பிரசுரிக்கப்பட்டது.
*********************************************
மாமூ நேத்து பொட்டில நூசு பாத்தியா...
அந்த வீடியோ மேட்டரா, பாக்கலையே மச்சி...
அட அதில்லைப்பா, நடு சாமத்துல ஒரு நூசு சொன்னாம்ப்பா, நம்ம ஊரு எல்லைக்கு அப்பால
பறக்கும் தட்டு ஒன்னு சுத்தி வந்துச்சாம்பா, அது வந்து போன தடம் கூட இன்னும் அப்படியே
இருக்காம், நம்ம பக்கத்துக்கு ஊரையே தூக்கிட்டு போயிருச்சாம் நூசுல சொன்னான், வாரியா போய் பாத்துட்டு வரலாம்.
எதுனா டுபாக்கூர் நூசா இருக்கப்போவுது, வா பொழப்ப பாப்போம்.
நிசமான நூசுதாம்பா, என் பக்கத்துக்கு வூட்டுக்காரன், அவன் வயலுக்கு காவல் இருக்கும்போது
பாத்திருக்காம்பா, நம்ம ஜம்போ பிளேன்ஐ விட பத்து மடங்கு பெருசா இருந்திச்சாம் அந்த பறக்கும் தட்டு.
அவன் விவரிக்க....எனக்கு ஆர்வம் தொற்றி கொண்டது, வா போய் பார்க்கலாம்.
நங்கள் அந்த இடத்தை (கிராமத்தை?) நெருங்க முடியாத அளவுக்கு கூட்டம், பட்டணத்துல இருந்து குறுந்தாடி
வச்ச விஞ்ஞானிகள் (!!!) எல்லாம் வந்து இருந்தாங்க. உள்ளூர் ஏட்டு அல்லாரையும் விரட்டிகிட்டு இருந்தாரு.
அந்த இடத்தை யாரும் நெருங்கவே முடியலை, ராத்திரி நூசுல பார்த்துக்கலாம்னு கிளம்பி
வந்திட்டோம்.
நூசு போடற நேரம் ஆச்சு.....ஊரு சனம் மொத்தமும் பஞ்சாயத்து பொட்டி முன்னால
உக்காந்து கிடந்துச்சுங்க.
ஒரு சோகமான செய்தி, நேற்று நள்ளிரவு, அடையாளம் தெரியாத ஒரு பறக்கும் தட்டு வந்து சென்ற பின்னர் ஒரு ஊரே காணாமல் போய் விட்டது, இது பற்றி நம் விஞ்ஞானிகள் மேலதிக தகவல் ஏதும் இப்பொழுது தர இயலாத
நிலைமையில் இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரம் கூறியது.......
எட்டு மாதங்கள் கழிந்த பின்பு....
பூமி கிரகத்தில் இந்த செய்தி படிக்கப்பட்டது...
ஓர் மகிழ்ச்சியான செய்தி.... நாம் அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை
கண்டு பிடித்து உள்ளது, அதோடு அனுப்பிய துணை விண்கலம்
"25 - கிராம் எடை கொண்ட மண்ணையும்" எடுத்து கொண்டு வெற்றிகரமாக நம் பூமியின் சுற்று பாதைக்குள் நுழைந்து விட்டது.